நம்முடைய அறக்கட்டளையின் சேவையானது திருச்செந்தூர் - தைப் பொங்கல் திருவிழா முன்னிட்டு முருகனை காண பக்தர்களாக 1988 முதல் இன்று வரை தொடர்ந்து 32 ஆண்டுகளாக பாதயாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் யாத்திரையாக செல்கின்ற பக்தர்களுக்கு செல்லும் வழிகளில் அன்னானம், சுக்குகாபி, மிளகுபால், பாதாம்பால் போன்ற சேவைகளை பக்தர்கள் வழங்குவார்கள். எங்களது பாதயாத்திரை குழு ஸ்ரீவைக்குண்டம் முன்பாக உள்ள பாதயாத்திரையாக செல்லும் வழியில் பொன்னங்குறிச்சி E.B அலுவலகத்தில் இரவு பால் அருந்தி செல்வது வழக்கம். வழக்கமாக 2007 ஆம் ஆண்டு பாதயாத்திரை செல்லும் போது எங்களது அடியார்களுக்கு அந்த தேனீர் கிடைக்கவில்லை. நாங்கள் அனைவரும் போகும் வழிகளில் அந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டு திருச்செந்தூர் சென்றடைந்தோம். தைப் பொங்கலுக்கு முந்தைய நாள் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் நாமும் நமது குழுவின் சார்பாக பக்தர்களுக்கு ஏதாவதாக செய்தாக வேண்டும், இந்த ஆண்டே வருகின்ற தைபூசம் திருவிழாவிற்கு தேனீர், பிஸ்கட் வழங்குவோம் என முடிவு செய்தோம். அந்த ஆண்டு முருகனை வழிபட்டு ஊர் திரும்பிய பின்பு அந்த ஆண்டே 24.02.2007 சனிக்கிழமை அன்று மாலை தைப்பூசத்திற்கு முந்தைய நாள் தேனீர் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
அதன்படி எங்களது குழுவின் உறுப்பினர்கள் உதவியுடன் பெரியவாகள் ஆசியுடன் தைபூசம் முந்தைய நாள் காலை 40 லிட். பால் வாங்கி அதனை பாதாம் பவுடருடன் காய்த்து நான்கு 15 லிட். டீ கேனில் அடைத்து 1 ரூபாய் பாக்கெட் (Packed 50-50 Biscuit) 715/-க்கு வாங்கி மதியம் நான்கு மணியளவில் எங்களது ஊர் பாளையங்கோட்டை அருகில் V.M.சத்திரம், கிருஷ்ணாபுரம் போன்றதொரு இடத்தில் பாதயாத்திரையாக செல்லுகின்ற பக்தர்களுக்கு சேவை செய்வது என முடிவு செய்து ஒரு பெட்ரோல் ஆட்டோவில் கிளம்பினோம். நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களுடன் எங்களது வாகனம் சென்றது. நாங்கள் நினைத்த இடங்கள் தாண்டி செல்லும் வழிகளில் பாதயாத்திரையாக பக்தர் யாவரும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். பயம் மனதில், முருகனை வேண்டி தூண்டியது.
நாங்கள் செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் வழியாக செல்லும் பாதையில் பக்தர்கள் இல்லாதது கண்டு பயம் அதிகமாகியது. நாங்கள் சென்ற வாகனத்தின் டிரைவர்; முருகன் உங்களை சோதிப்பதாகவும், ஒரு வேலை திருச்செந்தூர் சென்று சேவை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கினார். ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை போன்ற இடங்களிலும் பக்தர்களை காண முடியவில்லை. வாகனம் சென்று கொண்டே இருக்கிறது. மணத்தி, புறையூர் தாண்டி சென்று கொண்டிருக்கையில் அங்கமங்கலம் எனும் கிராமத்திற்கு முன்பு ஒரு தாம்போதி (வாய்க்கால் பாலம்) அதே வழியில் சராசரியாக 30 சுவாமிகள் பச்சை வேஷ்டியில் குளித்து விட்டு முருகன் கோசத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.
எங்கள் வாகன ஓட்டுனர் அவர்களை தாண்டி அந்த பாலம் கழித்து இடதுபுறம் ஒரு கிணறு அருகில் வாகனத்தை நிறுத்தி மேஜை போட்டு பால் மற்றும் பிஸ்கட் எடுத்து வைத்து பக்தர்களுக்கு சேவையை தொடங்கினோம். அந்த வருடமே முருகன் நமக்கு சேவை செய்வதற்கான இடம் தேர்வு செய்து வைத்துள்ளதாக அனைவரும் பேசி கொண்டோம். ஒரு வழியாக இரவு 7 மணிக்குள் சேவைகள் முடித்து ஊர் திரும்பினோம். நாட்கள் கடந்தன, அடுத்த ஆண்டு பாதயாத்திரை சென்று வந்தோம். தைப்பூசம் திருநாள் வந்தது. எங்களது உறுப்பினர்கள் முருகன் நமக்கு சேவை புரிய ஏற்படுத்தி கொடுத்த அதே ஊரில், அதே இடத்தில் சேவை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்கள்.
அதன்படி இரண்டாம் ஆண்டாக 21.01.2008 திங்கள்கிழமை தைப்பூசம் முந்தையநாள் சுமார் 50 லிட்டர் ஆரோக்யா பால் மற்றும் 2 பெட்டி மேரி பிஸ்கட் உடன் நாங்கள் பால் வாங்கிய பால் டீலர் எங்களுக்கு சேவை புரிய செல்ல வாகனத்தை அளிப்பதாக கூறி கூண்டு பால் வண்டியில் சேவைகளை தொடர்ந்தோம். அதே ஊரில் அதே இடத்தில் வீட்டில் இருக்கும் எமர்ஜென்ஸி லைட் உதவியுடன் சேவைகள் முடிந்து வந்தோம். வரும் வழியில் எங்களது வாகனம் பழுது ஏற்பட்டு மீண்டும் சரி செய்யப்பட்டு ஊர் திரும்பினோம். நாட்கள் கடந்தன. தைப்பூசம் விழா நாள் நெருங்கியது.
எங்களது குழுவின் உறுப்பினர் ஒருவர், தாம் 407 லோடுவேன் வாங்கி இருப்பதாகவும் இந்த ஆண்டு நமது சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அந்த வண்டியில் எங்களது உறுப்பினர்கள், மற்றும் பெரியோர்கள் உதவியுடன் 02.02.2009 திங்கள்கிழமை 150 லிட்டர் பால் அதிகரித்து 15 டீகேனில் 3 பெட்டி மேரி பிஸ்கட் மற்றும் 407 வேனில் உறுப்பினர் ஒருவர் ஜெனரேட்டர் வழங்க லைட் உதவியுடன் அந்த ஆண்டு இரவு 11 மணி வரை எங்களது சேவைகள் நடந்தது. நேரம் அதிகமாகவும் நாங்கள் கொண்டு சென்ற தேனீர், பாதாம் பால் சூடு ஆறியதாக பக்தர்கள் கூறினார்கள். ஊர் திரும்பினோம். எங்களது உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அந்த ஊரில் ஏதாவது ஒரு கோவிலில் வைத்து தேனீர் ஏற்பாடு செய்து பக்தர்களுக்கு சூடாக வழங்கினால் நன்றாக இருக்கும் எனவும், ஏதாவது கோவிலை ஏற்பாடு செய்யுங்கள் எனவும் கூறினார்கள்.
எங்களது குழுவின் உறுப்பினர் திரு.பாலாஜி அவர்கள், பத்திரிக்கை துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, பக்தி ஸ்பெஷல், பக்தி பத்திரிக்கைகள் மூலம் அந்த ஊரான அங்கமங்கலத்தில் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தா திருக்கோவில் ஒன்று இருப்பதாகவும், அந்த கோவிலில் தாங்கள் திருவிளக்கு பூஜை நடத்தியதாகவும், நாம் அந்த கோவில் சென்று அந்த அர்ச்சகரை சந்தித்து நமது சேவைக்கான பால் சூடாக காய்த்து பக்தர்களுக்கு கொடுப்பது பற்றி பேசி வருவோம் என கூறினார். நாட்கள் கடந்தன. நான்காம் ஆண்டு தைப்பூசம் திருநாள் நெருங்கியது. 29.01.2010 வெள்ளிக்கிழமை 170 லிட்டர் பால் பாதாம்பாலுடன், 4 பெட்டி மேரி பிஸ்கட்டுடன் அதிக உறுப்பினர்களுடன் 407 வேனில் இரவு 11 மணிக்கு மேல் சேவைகள் தொடர்ந்தோம். இராஜபாளையத்தை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் பால் சூடாக வழங்கும்படி, அறிவுரை கூறி சென்றார்கள். ஊர் திரும்பினோம். உறுப்பினர் பாலாஜி உதவியுடன் நாங்கள் மூன்று பேர் அங்கமங்கலம் சென்று அந்தகோவில் அர்ச்சகர் திரு.S.தாணு அவர்களை சந்தித்து விபரம் கூறினோம். விபரங்களை கேட்டுக் கொண்டு, அந்த அர்ச்சகர் அந்த கோவிலில் அதே மாதத்தில் 12.12.2010 ஞாயிறு அன்று கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாகவும் அந்த கும்பாபிஷேகத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தாங்களும் இணைந்து அன்னதானம் வழங்வோம் எனவும் கூறி கொண்டு எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பயம் கலந்த உணர்வுகள் அதிகரித்தது. நாட்கள் கடந்தது. 12.12.2010 அன்று எங்களது குழுவின் உறுப்பினர்கள் பக்தர்கள் உதவியுடன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அன்னதான சேவைகள் புரிந்தோம். முடித்து ஊர் திரும்பும் போது எங்கள் அனைவரையும் அந்த திருக்கோவில் அர்ச்சகர், பாராட்டுதலுடன் மூலஸ்தானத்தில் பூஜை செய்து எங்கள் அனைவரிடத்திலும் தைப்பூசம் அன்னதானம் வழங்குவோம் என கூறியது, எங்களுக்கு பயம் கலந்த பக்தியுடன் ஊர் திரும்பினோம். பக்தர்கள், பெரியோர்கள் உதவியுடன் நன்கொடைகள் வசூல் செய்து அந்த ஆண்டு முதல் அங்கமங்கலத்தில் தைப்பூசம் முந்தைய நாள் இரவு (19.01.2011) புதன் கிழமை அந்த திருக்கோவிலில் உணவு தயாரித்து (இட்லி, பொங்கல், கேசரி) குரும்பூர் மெயின் ரோடு - இடப்புறம் - ஒரு இடத்தில் அந்த திருக்கோவில் அர்ச்சகர் முழு உதவியுடன் தைப்பூசம் முந்தையநாள் காலை 6 மணியளவில் அன்னதானம், சாமியானம் அமைத்து பக்தர்களுக்கு கையில் தட்டுடன் தண்ணீர் பாக்கெட் உடன் சேவைகள் ஆரம்பித்தோம்.
ஆண்டுதோறும் இந்த தைப்பூசம் அன்னதான விழா சிறப்பாக ஸ்ரீஅன்னபூரணியின் பிரசாதமாக வழங்கப்படும் என அந்த திருக்கோவில் அர்ச்சகர் திரு.S.தாணு அவர்கள் எங்களிடம் கூறி எங்களை உற்சாகப்படுத்தி, செயல்பட வைத்தார்கள். நாட்கள் கடந்தன. இரண்டாம் ஆண்டு அன்னதானம் 06.02.2012 திங்கள் கிழமை நடைபெற்றது. காலை உணவு முடித்து சாம்பார் சாதம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டு சுத்தமல்லியை சேர்ந்த சமையல் கலைஞர் மூலம் உணவு தயாரித்து சேவை செய்யப்பட்டது. பந்தலில் காலை இராஜபாளையத்தை சேர்ந்த முருகதாஸ் என்ற அடியார் எங்களை கூப்பிட்டு விட்டார். நாங்கள் கோவிலில் இருந்து வந்து அவர்களை சந்தித்தோம்.
அவர்கள் உங்கள் குழு சிறப்பாக செயல்படுகிறார்கள். முருகனின் ஆசியும் அருளும் கிடைக்க பெறுவீர்கள் என கூறிக் கொண்டு அன்ன தர்மம் வளர வேண்டும், வரும் காலங்களில் நீங்கள் பக்தர்களை அமர வைத்து அறுசுவை உணவு வழங்குவீர்கள் என கூறிக் கொண்டு ஒரு 51 ரூபாயை எங்களிடம் கொடுத்து அடுத்த ஆண்டு சேவைக்கு என கூறினார்கள். எங்களுக்கு பயம் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்த பக்தர் எங்களை ஆசீர்வதித்தது மட்டும் அல்லாமல் தங்களது குடும்பத்தை அழைத்து அனைவரையும் நன்கொடை வழங்க செய்தார். ரூபாய்.2350/- பிரித்து அடுத்த ஆண்டு சேவைகள் புரியுங்கள் என வாழ்த்தி சென்றார். அவர்கள் வழங்கிய ரூ.51/- ரூபாய் நினைவாக நாங்கள் இன்றும் வைத்துள்ளோம். நாட்கள் கடந்தன.
ஒவ்வொரு ஆண்டும் அங்கமங்கலம் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தா திருக்கோவிலில் நடைபெறக்கூடிய வித்யா கணபதி ஹோமம், பங்குனி உத்திர திருவிழா, வருஷாபிஷேகம் என அனைத்து விழாவிற்கு சென்று வருகிறோம். மூன்றாம் ஆண்டு அன்னதான தைப்பூசம் விழா வரும் முன் நாங்கள் அன்னதானம் வழங்கிய இடம் விலை போகின்றது, அந்த இடத்தில் கட்டிடம் அமைந்தது. பயம் கலந்த உணர்வுடன் அர்ச்சகர் திரு.S.தாணு அவர்களிடம் பேசினோம். அவர்கள் தைரியம் கொடுத்து எதிரில் உள்ள இடத்தின் சொந்தக்காரர் கோவையைச் சேர்ந்த திரு.S.வெற்றிவேந்தன் - சாந்தி அவர்கள் உதவியுடன் இன்றும் அன்னதானம் நடைபெறக்கூடிய இடத்தை எங்களுக்கு ஏற்பாடு செய்து உதவினார்கள். அந்த 3ஆம் ஆண்டு 26.01.2013 சனிக்கிழமை அந்த புதிய இடத்தில் பந்தல் அமைத்து பக்தர் அமர்ந்து உணவு அருந்த அனைத்து உதவிகளையும் அர்ச்சகர் திரு.S.தாணு அவர்கள் உதவி செய்தார்கள். அந்த வருடம் பக்தர்களுக்கு அறுசுவை உணவாக மதிய முழு சாப்பாடு சேவை வழங்கப்பட்டது. இரவு 8 மணி வரை பாதாம் பால் வழங்கி நிறைவு செய்து ஊர் திரும்பினோம். புதிய அனுபவமாக அமைந்தது. இறைவனின் ஆசியும், கருணையும் எங்களுக்கு கிடைத்தது.
(பள்ளி மாணவர்கள் சேவைக்கு பணிபுரிந்தது புதிய அனுபவமாக இருந்தது).
அந்த ஆண்டு பாதயாத்திரை பக்தர்கள் எங்களது சேவைகளை ஆசீர்வதித்து பந்தல் நன்கொடை வழங்கி சென்றது எங்களுக்கு புதிய அனுபவமாகவும் பயம் கலந்த பக்தி உணர்வுகளும் அதிகரித்தது. அந்த ஆண்டு எங்கள் குழுவின் அதிகமான பக்தர்களும், மகளிர் மற்றும் குழந்தைகள் பங்கேற்றது சந்தோசமாக இருந்தது.
(16.01.2014) - வியாழக்கிழமை - தைப்பூசம் முந்தைய நாள் - எங்களுக்கு நான்காம் ஆண்டாக அமைந்தது. பொங்கல் திருநாள் மறுநாள் நாங்கள் சேவை புரிய செல்லாததனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு நெருக்கடியான சூழல் அமைந்தது. காய்கறிகள் வாங்குவது, நன்கொடைகள், பொருட்கள் சேகரிப்பது என குழு உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அன்னதான நாள் விடுமுறை மற்றும் உழவர் திருநாளாக அமைந்ததால் பக்தர்கள், குடும்ப உறுப்பினாகள், மகளிர் மற்றும் குழந்தைகள், அதிகமாக பங்கேற்றார்கள்.
எங்களது குழுவின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் ஐந்தாம் ஆண்டின் தைப்பூசம் விழா தேதியில் நட்சத்திர குழப்பத்தினால் தேதி தவறாக முடிவு செய்து 02.02.2015-க்கு பதிலாக 01.02.2015 ஞாயிறு அன்று அன்னதானம் ஏற்பாடு செய்து பக்தர்கள் வருகை குறைவினால் அன்னதானத்தை பக்தர்கள் இருப்பிடம் சென்று மாலை 5 மணி வரை வழங்கி வந்தது ஒரு புதிய அனுபவம்.
உறுப்பினர்கள் அனைவரின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் அன்னதர்மம் பல பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டது. மறுநாள் காலை பாளை இராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் வைத்து பக்தர்கள் உதவியுடன் அன்னம் தயாரித்து சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து 407 வேனில் ஏற்பாடு செய்து அன்னதான பந்தல் சென்று பக்தர்களிடமும், அடியார்களிடமும் மனம் வருந்தி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று அவர்கள் இருப்பிடங்கள் வரை சென்று மாலை வரை அன்னதானம் வழங்கியது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. அந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்த சமையல் கலைஞர் அன்னம் தயாரித்து வழங்கினார்.
23.01.2016 சனிக்கிழமை ஆறாம் ஆண்டு அன்னதான விழா நாளாக அமைந்தது. 22.01.2016 அன்று மாலை சுக்குமல்லி காபியும், தைப்பூசம் முந்தையநாள் அன்னதானம், காலை உணவுடன் இனிப்பு வழங்கப்பட்டது, மதியம் அறுசுவை உணவு, இந்த ஆண்டு இரவு உணவு, சேவை தொடங்கியது. வீடியோ எடுக்கப்பட்டது. சேவை புரிவதற்கு பக்தர்கள், மகளிர், குழந்தைகள் என அனைவரும் பங்கு பெற்று சிறப்பாக நடைபெற்றது.
08.02.2017 புதன்கிழமை நமது தைப்பூசம் அன்னதானம் ஏழாம் ஆண்டில் அடி எடுத்து செயல்பட்டது. பாளையை சேர்ந்த சமையல் கலைஞர் மூலம் மூன்று நேரமும் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு மிளகு பாலுடன் சேவைகள் நிறைவடைந்தது. அந்த வருடம் நமது அன்னதான குழுவை அரசாங்கத்தில் அறக்கட்டளையாக பதிவு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
30.01.2018 நமது அன்னதான விழா எட்டாவது ஆண்டு, மருத்துவ சேவை பாளையை சேர்ந்த திரு.V.வெங்கடேஷ்வரன், M.B.B.S., DCH., அரசு மருத்துவர் அவர்கள் குழு உதவியுடன் பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. மூன்று வேளை உணவு மற்றும் பாதாம் பால் சேவையுடன் நிறைவு பெற்றது. முருகன் அருளால் அந்த ஆண்டு ஜுலை மாதம் 26ஆம் நாள் நமது அன்னதானக்குழுவை அரசாங்கத்தில் ஸ்ரீகார்த்திகேயன் பக்தர் சேவா அறக்கட்டளையாக பதிவு செய்தோம். திருநெல்வேலி அறக்கட்டளை பதிவாளர் திரு.குத்தாலநாதன் அவர்கள் மூலம் அரசாங்கத்தில் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.
(பதிவு எண்.83/2018) 20.01.2019 ஞாயிற்றுகிழமை ஒன்பதாம் ஆண்டு அன்னதான விழா, இந்த ஆண்டில் நமது பந்தல் அமைப்பு பணிகள், இரும்பு ஆங்கில் அமைத்து சிறப்பாக அமைக்கப்பட்டது. பக்தர்களுக்கு முந்தைய நாள் மாலை 5 மணிக்கு சுக்குமல்லி காபி வழங்கப்பட்டது. நமது அறக்கட்டளை உறுப்பினர் உதவியுடன் காலை உணவுடன் வடை சேர்த்து வழங்கப்பட்டது. மதியம், இரவு என மூன்று வேளை அன்னம்பாலிப்புடன் விழா இரவு 9 மணிக்கு நிறைவுற்றது. நமது அறக்கட்டளைக்கு பாளையில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு (1114101064526) என்ற எண்ணில் தொடங்கப்பட்டது.
Bank Details:
SRI KARTHIKEYAN BAGTHAR SEVA ARAKKATALAI
BANK NAME – CANARA BANK, PALAYAMKOTTAI
A/C NO – 1114101064526
IFSC Code No: CNRB0001114
Office Cell No: 98435 – 60082.