ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தா திருக்கோவில் வரலாறு

அதிசய திருக்கோயில் அங்கமங்கலம் ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தா திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கமங்கலம் கிராமத்தில் ஸ்ரீநரசிம்மன் தனது தங்கையான ஸ்ரீஅன்னபூரணியுடன் மானிட ரூபத்தில் வீற்றிருக்கும் ஆலயம் உள்ளது.  தமிழ்நாட்டில் ஸ்ரீநரசிம்மர் தங்கை ஸ்ரீஅன்னபூரணியுடன் வீற்றிருக்கும் ஆலயம் இங்கு மட்டும் தான் உள்ளது.  சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.


தல வரலாறு :
    ஸ்ரீமஹாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர் போக்க தூணிலிருந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார்.  சந்தியா கால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி தன் தொடை மீது வைத்து பிளந்து வதம் செய்தார்.  அதன் பின்னரும் ஸ்ரீநரசிம்மருக்கு கோபம் குறையவில்லை.  மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் அஞ்சினர்.  முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றனர்.  ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக்கனலுடன் காட்சியளித்தார்.


    தேவேந்திரன் உள்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர்.  பிரம்மாவோ என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார்.  நரசிம்மரின் தோற்றத்திற்கு காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்துமாறு யாவரும் வேண்டினர்.  தன்னை போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர்.  ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாக குறையவில்லை.


    ஸ்ரீநரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்து விடுமோ என எல்லோரும் அஞ்சினர்.  தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி சிவபெருமானிடம் சென்று வேண்டினர்.  சிவபெருமான் தனது துணைவியான ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீநரசிம்மரிடம் சினம் தணிந்திட வேண்டினாள்.  தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார்.  ஸ்ரீநரசிம்மர் பின்னர் சரபதீர்த்தத்தில் நீராடி (தெப்பக்குளம்) இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இந்த ஊரில் உள்ள ஈஸ்வரனுக்கு நரசிங்கநாத ஈஸ்வரன் என்றும், இங்குள்ள சிவாலயம் நரசிங்கநாத ஈஸ்வரன் கோவில் என்றும் பெயர் பெற்றது.


சிறப்பம்சம்
    இக்கோயிலில் நரசிம்மர் சாந்தமாக நரசிம்மராக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.


பூஜை வேளை
    தினசரி பிரம்ம முகூர்த்த வேளையில் அதிகாலையில் பூஜை நடைபெறுகிறது. இதர நேரங்களில் வருபவர்கள் 9443979794 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தி வந்தால் எந்நேரமும் தரிசனம் பண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.


திருவிழா நாட்கள்
    பங்குனி உத்திரம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம் ஸ்ரீஅன்னபூரணிக்கு வளைகாப்பு, தீபாவளி தினத்தன்று ஸ்ரீஅன்னபூரணிக்கு லட்டு அலங்காரம், ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி மற்றும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் ஸ்ரீநரசிம்மருடைய உக்கிரம் தணிய பானக அபிஷேகம் செய்யப்படுகிறது.  கார்த்திகை மாதம் வருஷாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது.  அனைத்து திருவிழா காலங்களிலும் அன்னதானம் கண்டிப்பாக நடைபெறும்.
திருக்கோவிலை அறக்கட்டளை நிர்வாகிகள் திறம்படி பராமரித்து வருகிறார்கள்.
வேண்டுதல்


    திருமண தடைகள் விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி, தொழிலில் முன்னேற்றம் ஏற்பட சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.  அரசுத் தேர்வு எழுதுகின்ற மாணவ, மாணவியர்களுக்காக ஸ்ரீவித்யா கணபதி ஹோமம் நடத்தி, சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
தலவிருட்சம்    :    இலுப்பை மரம்
தீர்த்தம்    :    சரப தீர்த்தம்


பிரசாதம்    
    ஸ்ரீஅன்னபூரணியும் வீற்றிருப்பதால் இங்கு விபூதியும் குங்குமமும் வழங்கப்படுகின்றது.


இருப்பிடம்
    திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அங்கமங்கலம் கிராமம்.
        அருகில் உள்ள இரயில் நிலையம் - குரும்பூர்
        அருகில் உள்ள விமான நிலையம் - தூத்துக்குடி
    ஸ்ரீநரசிம்மரின் உக்கிரம் தணிய வெற்றேவர் மாலை அணிவிக்கப்படுகிறது.  ஸ்ரீஆதிபூதத்தாருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
வேண்டியதை உடனே கொடுக்கக்கூடிய சக்தி ஸ்ரீநரசிம்மருக்கு மட்டும்தான் உண்டு. வாருங்கள் நரசிம்மரை வழிபடுங்கள், வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள்.


நிகழ்வுகள்
முருகன் அருளால் நமது அறக்கட்டளையின் சேவைகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வுகளில் வளர்ச்சி காண்கின்றது.  2007-ஆம் ஆண்டு பாதாம் பாலில் தொடங்கி 2011-ஆம் ஆண்டு காலை சிற்றுண்டியாக தொடர்ந்து, 2013-ல் மதிய அறுசுவை உணவாக, 2016-ஆம் ஆண்டு முதல் நிகழ்வுகள் முந்தையநாள் மாலை சுக்குகாபி சேவை மற்றும் அன்னதான நாள் முழுவதும் காலை, மதியம், இரவு மூன்று வேளை அன்னம்பாலிப்பும், மருத்துவ முதல்உதவி சேவைகள் தொடர்ந்து வளர்ச்சி மூலம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  இந்த ஆண்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு குடிதண்ணீர் தொட்டி வைத்து சேவை செய்வது போன்ற நிகழ்வுகள் நிகழ உள்ளது.  பந்தல் அமைப்பு, சாமியானம், ஓலை பந்தல், இரும்பு ஆங்கில் அமைத்து செட் போடுதல் போன்று விரிவாக்க நிகழ்வுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.  வரும் காலங்களில் அனைவரின் உதவியுடனும், ஒத்துழைப்புடனும் அறக்கட்டளை சொந்த இடத்தில் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை! முருகா சரணம்...